எங்கள் பிரச்னைகள்
வேலைவாய்ப்பின்மை
திருநங்கைகளின் பாலின அடையாளம் பொதுவெளி சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதால் ஒரு அலுவலகத்திலோ அல்லது நிறுவனத்திலோ வேலை என்பது பெரும்பாலான திருநங்கைகளுக்கு நிறைவேறாத ஒரு அடிப்படை தேவையாகவே உள்ளது.
பெரும்பாலான திருநங்கைகள் இளம்வயதில் குடும்பத்திலிருந்து வெளியேற்றப்படுவதால் அல்லது வெளியேறுவதால் கல்வியை தொடரும் வாய்ப்பை இழக்கின்றனர். இதனால் கல்வித்தகுதி குறைவாகவே உள்ளது. அவர்கள் சில இடங்களில் கடைநிலை ஊழியர்களாகவே பணியாற்றுகின்றனர்.
பெரும்பாலான திருநங்கைகள் பாலியல் தொழில் செய்தும், பிச்சை எடுத்தும் தங்கள் பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக்கொள்கின்றனர். கடைக்காரர்களால் அவமானப்படுத்தப்படுதல், குண்டர்களால் வன்முறைக்கு ஆளாதல், பாலியல் வன்மம் என்று இதில் ஏராளமான துன்பங்களும், ஆபத்துகளும் உண்டு.
திருநங்கைகளின் பொருளாதார முன்னேற்றத்தை கவனத்தில் கொண்டு தமிழக அரசின் சமூக நலத்துறை சுயதொழிலுக்காக கடன் மற்றும் மானியம் வழங்க நிதி ஒதுக்கியுள்ளது. தமிழக அரசின் இம்முயற்சிக்கு சகோதரி உறுதுணையாக இருப்பதுடன் திருநங்கைகளின் பொருளாதார முன்னேற்றத்திற்காக சகோதரி ஒரு சிறப்பான சுயதொழில் திட்டத்தை துவக்கியுள்ளது. பட்டர்ப்ளைஸ் என்று அழைக்கப்படும் இச்சுயதொழில் திட்டத்தின் மூலமாக 10 திருநங்கைகள் நாகரிக அணிகலன்கள், பேஷன் நகைகள் செய்ய முழுமையான பயிற்சி எடுத்துள்ளனர்.
சென்னை ஜெயின் பெண்கள் கல்லூரியால் பயிற்றுவிக்கப்பட்ட திருநங்கைகள் முதல் முறையாக தங்கள் தயாரிப்புகளை Duchess Show என்ற கண்காட்சியிலும் பங்கேற்று விற்பனை செய்தனர். இச்சுயதொழில் திட்டம் வெற்றி பெற்றால் மேலும் பல திருநங்களின் வாழ்வு மலரும். தற்போது சமூக நலத்துறையின் நிதியுதவிக்காக நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம்.
சகோதரி © 2010