சகோதரி அமைப்பு பற்றி

சகோதரி ஒரு சேவை அமைப்பு மட்டுமல்ல. சகோதரி ஒரு இயக்கம், சகோதரி ஒரு குடும்பம். திருநங்கை கல்கியால் துவக்கப்பட்ட சகோதரி முற்றிலும் திருநங்கைகளின் சேவையால் இயங்கிக்கொண்டிருக்கிறது.
திருநங்கைகளில் வாழ்வு மிகவும் துயரமான நிலையில் சமூகத்தில் உள்ளது. இளம்வயதில் குடும்பத்தால் புறக்கணிக்கப்படுவதால் பாலியல் தொழில் மற்றும் பிச்சை எடுத்தல் என்ற கீழ்நிலைக்கு தள்ளப்பட்டு திருநங்கைகள் அனுபவிக்கும் துயரக்கதைகள் எத்தகைய கல்நெஞ்சம் படைத்தவர்களையும் கரைத்துவிடும்.
சகோதரி அமைப்பு கடந்த 5 வருடங்களாக இயங்கிக்கொண்டிருந்தாலும், முறையாக சேவை நிறுவனமாக 2008ல் பதிவு பெற்றது. சகோதரி இதுவரை அரசிடமோ, தனியார் தொண்டு நிதி நிறுவனங்களிடமோ எவ்வித நிதியுதவியும் பெற்றதில்லை. சகோதரியின் செயல்பாடுகள் அனைத்தும் எமது சேவை அறிந்து நண்பர்களும், நல் உள்ளம் கொண்டாரும் தரும் சிறிய நன்கொடை உதவிகளால்தான் சாத்தியமாகிக்கொண்டிருக்கிறது.
திருநங்கைகளின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக பல்வேறு தளங்களில் சகோதரி பணியாற்றுகிறது. திருநங்கைகளின் பாலின அடையாளத்தால் நிகழ்கின்ற புறக்கணிப்புக்கள் மற்றும் கொடுமைகளை அகற்ற அரசு, ஊடகங்கள், மாணவர்கள், நீதித்துறை, மருத்துவத்துறை என்று பல்தரப்பினருடன் இணைந்து பணியாற்றுகிறது சகோதரி.
சகோதரி அமைப்பு தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோவையை தலைமையிடமாக கொண்டுள்ளது. கேரளத்திலும் நாங்கள் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துகிறோம்.
வாருங்கள், திருநங்கைகளின் வாழ்வு உயர நீங்கள் எங்களோடு இணைந்து செயல்படுங்கள்.
சகோதரி © 2010